Sunday, June 30, 2013

சன் டிவியில் நாள் தோறும் பகல் பன்னிரண்டு மணிக்கு ' தேவதை'

சன் டிவியில் நாள் தோறும் பகல் பன்னிரண்டு மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அபிநயா கிரியேஷன்ஸின் வெள்ளைத்தாமரை மெகா தொடர் நிறைவடைந்தது.

நாளை (ஜூலை-01) திங்கள் முதல் தேவதை என்னும் புதிய தொடர் ஆரம்பமாகிறது. முற்றிலும் மாறுபட்ட கதையாம்சமும், நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பும் இத்தொடரின் சிறப்பம்சங்கள்

கதையின் நாயகி பூரணிக்கு மூன்று முகங்கள். மலிவு விலையில் மெஸ் நடத்தும் அன்னபூரணியாக அவளைப் பிராந்தியத்தில் அத்தனைப் பேருக்கும் தெரியும். அந்த குறைந்த விலையைக் கூடக் கொடுக்க முடியாமல் ஓசியில் சாப்பிட்டுப் போகும் ரெகுலர் கஸ்டமர்கள் அவளுக்கு நிறைய பேர் உண்டு. பூரணி முகம் சுளிக்க மாட்டாள். பசித்தவருக்கு உணவளிப்பது அவளது பிறவிக்குணம்

பூரணிக்கு இன்னொரு முகம் உண்டு. அது பிராந்தியத்தில் வசிக்கும் வயசு பெண்களுக்கும், விடலைப்  பையன்களுக்கும் மட்டுமே தெரிந்த முகம். வீடு ஒப்புக்கொள்ளாத பல காதல் திருமணங்களை அவள் நிச்சயித்து நடத்தி வைத்திருக்கிறாள். எத்தனை தடைகள், எப்பேர்ப்பட்ட வில்லன்கள் வந்தாலும் பூரணி தலையிட்டு விட்டால் ஒரு திருமணம் நடந்தே தீரும். இந்த ஒரே கரணத்துக்காகவே பகுதி வாழ் இளைய தலைமுறை அவளை தலைக்குமேல் வைத்து கூத்தாடும். அக்கா, அக்கா என்று நாய்க் குட்டிபோல் அவள் பின்னால் சுற்றுவார்கள்.

பூரணியின் மூன்றாவது முகம் அவளது வீட்டாருக்கு மட்டுமே உரியது. அங்கே அவள் ஒரு அன்பான மகள். இருபத்தேழு வயதாகியும் இன்னும் கல்யாணமாகவில்லையே என்று பெற்றோர் பரிதவிக்க, தினசரி யாராவது ஒருவன் வந்து பெண் பார்த்து போவதற்கு அவள் மாலையானால் சீவி, சிங்காரித்து, தலைகுனிந்து காப்பி தம்பளருடன் ஹாலுக்கு ஆஜராவது வழக்கம்.

அவளுக்குத் திருமணம் நடந்தால்தான் அவளது சகோதரர்கள் மூன்று பேருக்கு ஒரு வழி பிறக்கும். ஆனால் ஏன் அது மட்டும் நடக்கவே மாட்டேனென்கிறது? காதலிக்கும் அனைவருக்கும் அவள்தான் கடைசி சரணாலயம். ஆனால், அவள் வாழ்வில் ஏன் கல்யாணம் என்ற ஒன்று வர மறுக்கிறது? தூக்கிவாரிப்போடச் செய்யும் ஒரு பகீர் பின்னணியில் மையம் கொண்டிருக்கிறது இந்த பூரணிப் புயல்!.
எங்கிருந்து வந்தாள். இந்த தேவதை?

நடிப்பு : சுபத்ரா, டி.துரைராஜ், ஷோபனா, வி.கே.ஆர்.ரகுநாத், நேசன், ஹவிஸ்

கதை, திரைக்கதை : பா.ராகவன், வசனம்: கார்க்கி, இசை பாலபாரதி, ஒளிப்பதிவு: ராஜூஸ்,  இயக்கம்: பி.நீராவிப் பாண்டியன், தயாரிப்பு: அபிநயா கிரியேஷன்ஸ் ராதா கிருஷ்ணசாமி.