Friday, October 24, 2008

''தந்திரன்'' முன்னோட்டம்


ஸ்ரீசரவணபவ மூவிஸ் பட நிறுவனம் சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தயாரிக்கும் படம் 'தந்திரன்'. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.ஜே.போஸ். வசனம் - ரதன் சந்திரசேகர்.


'பஞ்சாமிர்தம்', 'அ ஆ இ ஈ' உட்பட பல படங்களில் நடித்து வரும் அரவிந்த், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுவேதாமேனன் நடிக்கிறார். இவர்களுடன் சித்திக், ஐஸ்வர்யா, வினாயகம் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


பிரபல மலையாள மந்திரவாதியிடம், தனது காணாமல் போன சகோதரனை கண்டுபிடிக்க வழி கேட்கிறாள் கதாநாயகி. கதாநாயகியின் அழகில் மயங்கும் மந்திரவாதி, அவளை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துகிறான். காதலியை காணாமல் தேடும் காதலன், அந்த மந்திரவாதியிடமிருந்து தனது காதலியை எப்படி மீட்கிறான், காதலியின் சகோதரன் கதி என்ன ஆனது? என்பது கதை. அதை காதல், ஆக்ஷன். மர்மம் கலந்த விறுவிறுப்பான திகில் படமாக உருவாக்கி வருகின்றனர்.


இப்படத்திற்கு கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷி இசையமைக்க, பாடல்களை தாணுகார்த்திக், விஜய்கிருஷ்ணா, அமிர்தா ராமலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் உள்ள காடுகளில் நடந்து வருகிறது.

Monday, October 20, 2008

தெய்வம் தந்த பூவே இசை வெளியீடு

ஒரு புதிய கோணத்தில் தாய் பாசத்தை சொல்லியிருக்கும் ஒரு மணி நேர டெலிபிலிம் 'தெய்வம் தந்த பூவே'. இதன் கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் வேணுஜி. பத்திரிக்கையாளரான இவர், முதன் முறையாக இயக்கி உள்ள படம் இது.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் மற்றும் விழாவில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அமீர், தங்கர்பச்சான், ஜெயம் ராஜா, சுப்ரமணியம் சிவா, டாக்டர் கமலா செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தமிழர் மாஸ்டர் ஆதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பள்ளி படிப்பில் முதல் மதிப்பெண் பெறும் ஆதவன், நடிப்பதற்கு ஆர்வப்பட்டு அவ்வப்போது பட வாய்ப்புகளை தேடி வந்தார். இப்போது அவருக்கு இந்தப் படத்தின் மூலம், தனது திறமையை நிரூபிக்க கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நடித்து முடித்திருக்கிறார்.
ஆதவனின் அம்மாவாக 'கருத்தம்மா' ராஜஸ்ரீ நடித்திருக்கிறார். இவர் கடந்த நான்கு வருடமாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் விலகியிருந்தவர், இந்த படத்தின் கதையை கேட்டு நடிக்க சம்மதித்தோடு, படத்தில் அந்த தாய் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவர்களோடு 'முதல்வன்' மகேந்திரன், பாக்யாஸ்ரீ, மாஸ்டர் ஆகி, மாஸ்டர் தேஜஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல விருதுகளை பெற்று, சில படங்களை இயக்கிய எடிட்டர் பி.லெனின், இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் தனது மனதுக்கு திருப்தி தரவில்லை என்றால் அதில் பணிபுரிவதில்லை என்று வைராக்கியத்தோடு இருக்கும் எடிட்டர் பி.லெனின், இப்படத்தின் கதையை கேட்டு இதற்கு ஒளிப்பதிவு செய்ய சம்மதித்தார். தற்பொழுது எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது.
தேசிய விருது பெற்ற பாடலாசிரியர், கவிஞர் பா.விஜய் இப்படத்தின் பாடலை எழுத, மோகன்ராஜ் இசை அமைத்துள்ளார். அப்பாடலை சைந்தவி பாடியுள்ளார். ஒப்பனை: நாகராஜன், உடைகள்: பலராம், ஸ்டில்ஸ்: ஸ்ரீராம் செல்வராஜ். கதை, திரைகதை, வசனம், இயக்கம் வேணுஜி, தயாரிப்பு கோஷன் மூவீஸ்.
- கே‌,செல்‌வி‌‌.

நண்பர்களை தேடி ஏங்க வைக்கும் ''புகைப்படம்''


மாயாபஜார் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் என்.ஜி.மணிகண்டன் தயாரிக்கும் முதல் படம் ''புகைப்படம்''! செல்வராகவனிடம் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜேஷ் லிங்கம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இந்தப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் பார்த்த அனைவருமே தங்களது பள்ளிக்காலத்து நண்பர்களையும், கல்லூரிக்காலத்து நண்பர்களையும் தேடி ஏங்குவார்கள். வழக்கமாக கல்லூரிக் கதைகளில் நட்பு ஊறுகாய் அளவு தொட்டுக் கொள்ளப்படும், ஆனால் இதில் நட்புதான் பிரதானம். புகைப்படம் என்பது படத்தில் வரும் ஒரு ஃபோட்டோ அல்ல, ஒரு பழைய போட்டோ பார்த்தால் அது பழைய நினைவுகளை உங்களுக்குள் வரவைக்கும்.

அதுபோல, இந்தப்படம் நீங்கள் மறந்து போன உங்கள் பள்ளிக்காலத்து, கல்லூரிக்காலத்து நண்பர்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வரும் ''புகைப்படம்'' என்று கவித்துவமாக பேசுகிறார் இயக்குனர் ராஜேஷ்லிங்கம்.
இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆகியிருக்கும் என்.சி.மணிகண்டன், இயக்குனர் ராஜேஷ்லிங்கத்தின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர். நண்பன் மீது நம்பிக்கை வைத்து நீ மற்றவர்களிடம் வேலைபார்த்தது போதும், நீயே இயக்குனர் ஆகிவிடு என்று நட்புக்கு தோள் கொடுத்திருக்கிறார்.

நான்கு பையன்கள், மூன்று பெண்கள் என ஏழு பேருமே புதுமுகங்கள். அம்ஜத்கான், நந்தா, லாரன்ஸ் சிவம், ஹரீஷ் கதை நாயகர்களாகவும் ப்ரியா, யாமினி, மிருணாளினி ஆகிய மூன்று பேர் கதை நாயகிகளாகவும் கல்லூரி மாணவர்களாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதில் ப்ரியா ஏற்கனவே வாமனன் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின் கங்கைஅமரன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். எடிட்டிங் B.லெனின், ஒளிப்பதிவு விஜய் ஆம்ஸ்ட்ராங். கலை, ஆரோக்யராஜ், நடனம் யாசின், சண்டைப்பயிற்சி, சுப்ரீம் சுந்தர், பி.ஆர்.ஓ.பாலன், இயக்கத்தில் உறுதுணையாக அசோஸியேட் இயக்குனராக மதன் பணியாற்றுகின்றனர்.

வேகமாக எடுக்கப்பட்டு வரும் இந்த 'புகைப்படம்' நட்பின் ஆழத்தை கண்டிபாக வெளிக்கொணரும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது ஒட்டுமொத்த டீமூம்.

''ஓடும் மேகங்களே'' முன்னோட்டம்


சாரா மேகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பாரதமணி அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் முதல் படம் ''ஓடும் மேகங்களே'' இப்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் என்.ஆர்.என்.செழியன். இவர் அர்ஜூன் நடித்த 'ஓற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணனிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தில் ரஞ்சித், சிவா, சதீஸ் என மூன்று புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். அதே போல ரோஷிணி, நட்சத்திரா, மேக்னா ஆகிய மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இதில் ரஞ்சித் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இவர்களோடு ரஞ்சிதா, சேதுவிநாயகம், பாலா உட்பட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை வேடத்தில் பிரபல நடிகர் இருவர் நடிக்க இருக்கிறார்.
வெவ்வேறு சூழ்நிலையில் படித்து, ஒரு கார்பரேட் கம்பியூட்டர் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் ஆறு இளைஞர்கள் பற்றிய கதை. அதில் அவர்களின் அணுகுமுறை, அலுவலகத்திலும், வெளி உலகிலும், நட்பு வட்டாரத்திலும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும், சமூகவிரோத சக்திகள், படிக்காதவர்கள் மத்தியில் எப்படி ஊடுருவுகின்றன என்பதையும், அதில் காதல் சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து படமாக்குகின்றனர்.
இப்படத்திற்கு ஏவி.எம். ரெக்கார்டிங் தியேட்டரில் வீ.தஷியின் இசையில் ஆறு விதவிதமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கலாபன், பரிணாமன், பரிதி, தாணுகார்த்திக், ஜீவாணி ஆகியோர் எழுதியுள்ளனர். திப்பு, மதுமிதா, பிரசன்னா, பி.சி.சுபீஷ், வினய்தா, சாருலதா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
இப்படத்தின் கதை எழுதி ஒளிப்பதிவு செய்கிறார் மைக்கேல் பிரபு.இ.வி., நடனம் ரமேஷ்ரெட்டி, சண்டைப்பயிற்சி பவர் பாண்டியன். இவர் இன்றைய இளம் முன்னனி நடிகர்கள் பலருக்கு சண்டைப்பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை வினோத்குமார், படத்தொகுப்பு தங்கவேல், நிர்வாகத் தயாரிப்பு ஏ.நவீன், ஜாய் டாம்னிக், தயாரிப்பு மேற்பார்வை சி.வி.விஜயன்.