Friday, October 24, 2008

''தந்திரன்'' முன்னோட்டம்


ஸ்ரீசரவணபவ மூவிஸ் பட நிறுவனம் சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தயாரிக்கும் படம் 'தந்திரன்'. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.ஜே.போஸ். வசனம் - ரதன் சந்திரசேகர்.


'பஞ்சாமிர்தம்', 'அ ஆ இ ஈ' உட்பட பல படங்களில் நடித்து வரும் அரவிந்த், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுவேதாமேனன் நடிக்கிறார். இவர்களுடன் சித்திக், ஐஸ்வர்யா, வினாயகம் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


பிரபல மலையாள மந்திரவாதியிடம், தனது காணாமல் போன சகோதரனை கண்டுபிடிக்க வழி கேட்கிறாள் கதாநாயகி. கதாநாயகியின் அழகில் மயங்கும் மந்திரவாதி, அவளை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துகிறான். காதலியை காணாமல் தேடும் காதலன், அந்த மந்திரவாதியிடமிருந்து தனது காதலியை எப்படி மீட்கிறான், காதலியின் சகோதரன் கதி என்ன ஆனது? என்பது கதை. அதை காதல், ஆக்ஷன். மர்மம் கலந்த விறுவிறுப்பான திகில் படமாக உருவாக்கி வருகின்றனர்.


இப்படத்திற்கு கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ.தஷி இசையமைக்க, பாடல்களை தாணுகார்த்திக், விஜய்கிருஷ்ணா, அமிர்தா ராமலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் உள்ள காடுகளில் நடந்து வருகிறது.

Monday, October 20, 2008

தெய்வம் தந்த பூவே இசை வெளியீடு

ஒரு புதிய கோணத்தில் தாய் பாசத்தை சொல்லியிருக்கும் ஒரு மணி நேர டெலிபிலிம் 'தெய்வம் தந்த பூவே'. இதன் கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் வேணுஜி. பத்திரிக்கையாளரான இவர், முதன் முறையாக இயக்கி உள்ள படம் இது.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் மற்றும் விழாவில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், அமீர், தங்கர்பச்சான், ஜெயம் ராஜா, சுப்ரமணியம் சிவா, டாக்டர் கமலா செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தமிழர் மாஸ்டர் ஆதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பள்ளி படிப்பில் முதல் மதிப்பெண் பெறும் ஆதவன், நடிப்பதற்கு ஆர்வப்பட்டு அவ்வப்போது பட வாய்ப்புகளை தேடி வந்தார். இப்போது அவருக்கு இந்தப் படத்தின் மூலம், தனது திறமையை நிரூபிக்க கூடிய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் நடித்து முடித்திருக்கிறார்.
ஆதவனின் அம்மாவாக 'கருத்தம்மா' ராஜஸ்ரீ நடித்திருக்கிறார். இவர் கடந்த நான்கு வருடமாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் விலகியிருந்தவர், இந்த படத்தின் கதையை கேட்டு நடிக்க சம்மதித்தோடு, படத்தில் அந்த தாய் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். இவர்களோடு 'முதல்வன்' மகேந்திரன், பாக்யாஸ்ரீ, மாஸ்டர் ஆகி, மாஸ்டர் தேஜஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்துள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பல விருதுகளை பெற்று, சில படங்களை இயக்கிய எடிட்டர் பி.லெனின், இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் தனது மனதுக்கு திருப்தி தரவில்லை என்றால் அதில் பணிபுரிவதில்லை என்று வைராக்கியத்தோடு இருக்கும் எடிட்டர் பி.லெனின், இப்படத்தின் கதையை கேட்டு இதற்கு ஒளிப்பதிவு செய்ய சம்மதித்தார். தற்பொழுது எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது.
தேசிய விருது பெற்ற பாடலாசிரியர், கவிஞர் பா.விஜய் இப்படத்தின் பாடலை எழுத, மோகன்ராஜ் இசை அமைத்துள்ளார். அப்பாடலை சைந்தவி பாடியுள்ளார். ஒப்பனை: நாகராஜன், உடைகள்: பலராம், ஸ்டில்ஸ்: ஸ்ரீராம் செல்வராஜ். கதை, திரைகதை, வசனம், இயக்கம் வேணுஜி, தயாரிப்பு கோஷன் மூவீஸ்.
- கே‌,செல்‌வி‌‌.

நண்பர்களை தேடி ஏங்க வைக்கும் ''புகைப்படம்''


மாயாபஜார் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் என்.ஜி.மணிகண்டன் தயாரிக்கும் முதல் படம் ''புகைப்படம்''! செல்வராகவனிடம் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜேஷ் லிங்கம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

இந்தப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவுடன் பார்த்த அனைவருமே தங்களது பள்ளிக்காலத்து நண்பர்களையும், கல்லூரிக்காலத்து நண்பர்களையும் தேடி ஏங்குவார்கள். வழக்கமாக கல்லூரிக் கதைகளில் நட்பு ஊறுகாய் அளவு தொட்டுக் கொள்ளப்படும், ஆனால் இதில் நட்புதான் பிரதானம். புகைப்படம் என்பது படத்தில் வரும் ஒரு ஃபோட்டோ அல்ல, ஒரு பழைய போட்டோ பார்த்தால் அது பழைய நினைவுகளை உங்களுக்குள் வரவைக்கும்.

அதுபோல, இந்தப்படம் நீங்கள் மறந்து போன உங்கள் பள்ளிக்காலத்து, கல்லூரிக்காலத்து நண்பர்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த வரும் ''புகைப்படம்'' என்று கவித்துவமாக பேசுகிறார் இயக்குனர் ராஜேஷ்லிங்கம்.
இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சம் என்னவெனில் நண்பனுக்காக தயாரிப்பாளர் ஆகியிருக்கும் என்.சி.மணிகண்டன், இயக்குனர் ராஜேஷ்லிங்கத்தின் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர். நண்பன் மீது நம்பிக்கை வைத்து நீ மற்றவர்களிடம் வேலைபார்த்தது போதும், நீயே இயக்குனர் ஆகிவிடு என்று நட்புக்கு தோள் கொடுத்திருக்கிறார்.

நான்கு பையன்கள், மூன்று பெண்கள் என ஏழு பேருமே புதுமுகங்கள். அம்ஜத்கான், நந்தா, லாரன்ஸ் சிவம், ஹரீஷ் கதை நாயகர்களாகவும் ப்ரியா, யாமினி, மிருணாளினி ஆகிய மூன்று பேர் கதை நாயகிகளாகவும் கல்லூரி மாணவர்களாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதில் ப்ரியா ஏற்கனவே வாமனன் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பின் கங்கைஅமரன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். எடிட்டிங் B.லெனின், ஒளிப்பதிவு விஜய் ஆம்ஸ்ட்ராங். கலை, ஆரோக்யராஜ், நடனம் யாசின், சண்டைப்பயிற்சி, சுப்ரீம் சுந்தர், பி.ஆர்.ஓ.பாலன், இயக்கத்தில் உறுதுணையாக அசோஸியேட் இயக்குனராக மதன் பணியாற்றுகின்றனர்.

வேகமாக எடுக்கப்பட்டு வரும் இந்த 'புகைப்படம்' நட்பின் ஆழத்தை கண்டிபாக வெளிக்கொணரும் என்பதில் சந்தேகமில்லை என்கிறது ஒட்டுமொத்த டீமூம்.

''ஓடும் மேகங்களே'' முன்னோட்டம்


சாரா மேகா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பாரதமணி அதிக பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் முதல் படம் ''ஓடும் மேகங்களே'' இப்படத்தின் திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் என்.ஆர்.என்.செழியன். இவர் அர்ஜூன் நடித்த 'ஓற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணனிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்தில் ரஞ்சித், சிவா, சதீஸ் என மூன்று புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். அதே போல ரோஷிணி, நட்சத்திரா, மேக்னா ஆகிய மூன்று புதுமுகங்கள் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இதில் ரஞ்சித் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். இவர்களோடு ரஞ்சிதா, சேதுவிநாயகம், பாலா உட்பட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை வேடத்தில் பிரபல நடிகர் இருவர் நடிக்க இருக்கிறார்.
வெவ்வேறு சூழ்நிலையில் படித்து, ஒரு கார்பரேட் கம்பியூட்டர் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் ஆறு இளைஞர்கள் பற்றிய கதை. அதில் அவர்களின் அணுகுமுறை, அலுவலகத்திலும், வெளி உலகிலும், நட்பு வட்டாரத்திலும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும், சமூகவிரோத சக்திகள், படிக்காதவர்கள் மத்தியில் எப்படி ஊடுருவுகின்றன என்பதையும், அதில் காதல் சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து படமாக்குகின்றனர்.
இப்படத்திற்கு ஏவி.எம். ரெக்கார்டிங் தியேட்டரில் வீ.தஷியின் இசையில் ஆறு விதவிதமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கலாபன், பரிணாமன், பரிதி, தாணுகார்த்திக், ஜீவாணி ஆகியோர் எழுதியுள்ளனர். திப்பு, மதுமிதா, பிரசன்னா, பி.சி.சுபீஷ், வினய்தா, சாருலதா ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
இப்படத்தின் கதை எழுதி ஒளிப்பதிவு செய்கிறார் மைக்கேல் பிரபு.இ.வி., நடனம் ரமேஷ்ரெட்டி, சண்டைப்பயிற்சி பவர் பாண்டியன். இவர் இன்றைய இளம் முன்னனி நடிகர்கள் பலருக்கு சண்டைப்பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலை வினோத்குமார், படத்தொகுப்பு தங்கவேல், நிர்வாகத் தயாரிப்பு ஏ.நவீன், ஜாய் டாம்னிக், தயாரிப்பு மேற்பார்வை சி.வி.விஜயன்.

Monday, September 29, 2008

''சாமிபுள்ள'' முன்னோட்டம்


‌அமிர்தா ஆர்ட் கம்பைன்ஸ் சார்பில் 'ஆக்ரா' படத்தை தயாரித்த அமிர்தா அன்பழகன் அடுத்து மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் புதிய படம் 'சாமிபுள்ள'.
'அன்பு', 'காதல் கிசு கிசு', 'அம்மா அப்பா செல்லம்' போன்ற படங்களில் நடித்துவரும், தற்போது மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னனி கதாநாயகனாக வலம் வரும் பாலா, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதையின் நாயகியாக ''கருவாப்பையா...'' பாடல் புகழ் கார்த்திகா நடிக்கிறார். படத்தில் இன்னொரு நாயகனாக புதுமுகம் ரக்ஷன் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி ஒருவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் தலைவாசல் விஜய், ஓ.ஏ.கே. சுந்தர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ரங்கராஜன். இவர் சித்திரைச் செல்வனிடம் அசோசியேட் டைரக்டராக இருந்தவர். இவர் இயக்கும் முதல் படம் இது. தனது சிஷ்யர் இயக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் பி.சித்திரைச் செல்வன். ஜே.கே.செல்வா இசையமைக்க, பாடல்களை திரைவண்ணன், நந்தலாலா எழுதியுள்ளனர். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கி, தொடர்ந்து மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் நடைபெற உள்ளது.

'''காதல்ஓசை'' முன்னோட்டம்பாவனாஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் கே.பி.இந்திரா கணேசன் ஒய். சுப்பராயடு இணைந்து தயாரிக்கும் படம் 'காதல் ஓசை'. இப்படத்தில் 'மாணவன் நினைத்தால்' பட நாயகன் ரித்திக், புதுமுகம் ராகி ஜோடியாக நடிக்க இவர்களுடன் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்காக அண்மையில் கள்ளகுறிச்சியில் ஒரு பரபரப்பான காட்சி படமானது. கதைப்படி காதல் ஜோடியை இரு குடும்பத்தினரும் அடியாட்கள் சகிதம் துரத்த, இவர்கள் ஒரு மருத்துவமனைக்குள் தஞ்சம் அடைகின்றனர். அவர்களை வெளியே விடச் சொல்லி பெற்றோர்கள் தகறாரு செய்ய, அதற்கு டாக்டர் மறுப்பதோடு, அவர்கள் இருவரும் என்ன தவறு செய்தார்கள், இதுவரை யாரும் செய்யாத தவறா செய்துவிட்டார்கள் என திருப்பி கேட்கிறார்.
அதற்கு அவர்கள் காதலர்கள் ஒன்று சேரக் கூடாது என்றும், ரத்தத்தில் எப்படி ஏ குரூப், பி குரூப் என பிரித்து வைக்கிறிர்களோ, அது மாதிரி இரு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் ஒண்ணு சேரக் கூடாது. அது நல்லதில்ல என எச்சரிக்கின்றனர்.
அதற்கு டாக்டர் ஒத்துப்போகாத ரத்தத்தை எப்படி சேர்க்க முடியாதோ அது மாதிரி ஒத்து போகாத மனசையும் சேர்த்து வைக்க முடியாது. அதே போல் ஒத்து போகிய மனசையும் யாராலேயும் பிரிக்க முடியாது என்று வாதிடுகிறார். இப்படி ஒரு காட்சியை கள்ளகுறிச்சியில் உள்ள டாக்டர் மகுடமுடியின் மருத்துவமனையில் படமாக்கியுள்ளனர்.
இதில் காதல் ஜோடிகளுக்கு வக்காலத்து வாங்கும் டாக்டர் பாத்திரத்தில், டாக்டர் மகுடமுடி நடிக்க, ரித்திக், ராகியுடன் வேடிக்கை பார்க்க ஐநூறுக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்தனர்.
கே.பி. இந்திரா கணேசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கம் இப்படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிஷ். கே. இசை அமைத்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் ‘அய்யன்’


வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எல்.எஸ் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்டம்கத் தயாரிக்கும் படம் ‘அய்யன்’. மாமதுரை படத்தில் நாயகனாக அறிமுகமாகி பாராட்டுகளைப் பெற்ற வாசன் கார்த்திக் இப்படத்தில் வீரம் மிக்க முனியசாமி எனும் பாத்திரத்தில் வாழ்கிறார்.
அவருக்கு ஜோடியாக அரியசெல்வி எனும் பாத்திரத்தில் திவ்யாபத்மினி எனும் புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் பிதாமகன் மகாதேவன், சண்முகராஜன், சிங்கமுத்து, இளவரசு, சூர்யகாந்த், கிரேன் மனோகர், சிசர் மனோகர், முத்துக்காளை, அல்வா வாசு, சூப்பர்குட் லட்சுமணன், சௌந்தர், சுப்புராஜ், விஜயகணேஷ், நெல்லை சிவா, போண்டா மணி என பலரும் நடிக்கிறார்கள்.
முக்கியமான காமெடி வேடத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் கேந்திரன் முனியசாமி. இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். கவிஞர் சினேகன் பாடல்கள் எழுத, காசி வி.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘கத்தாழ கண்ணால குத்தாத…’ புகழ் தினா நடனம் அமைக்க, சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் அமைக்கிறார். கலை என்.கே.பாலா, படத் தொகுப்பு – பி.சாய் சுரேஷ், தயாரிப்பு நிர்வாகம் – கே.ஆர்.பாலமுருகன்.
இப்படத்துக்காக பிரசாத் ஸ்டுடியோவில் இசைஞானி இளையராஜா இசையில்,
ஏ… சிவகாமி, அடியே சிவகாமி…
ஏ… தென்மதுர பொண்ணு
இது நான் பொறந்த மண்ணு
குலுங்கும் வாழக் கன்னு- நீ
சிலுத்து நிக்கிற பொண்ணு…
என்ற பாடல் சமீபத்தில் பாதிவானது. சினேகன் எழுதிய பாடல் இது.
பாடலைக் கேட்டபோது, ஒலிப்பதிவுக் கூடமே திருவிழாக் கோலம் பூண்டது போலானது. கேட்டவர் மெய்சிலிர்த்துப் போய் இசைஞானியின் இசையைப் பாராட்டினர்.
இதுகுறித்து இயக்குநர் கேந்திரன் முனியசாமி இப்படிக் கூறுகிறார்:
“இந்தப் படத்தோட கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும், ‘ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கு. இது நிச்சயமா வெற்றிப்படமா அமையும்’ என்று சொன்னார்.
இந்தப் படத்தின் இசைக்காக முழுக்க முழுக்க கிராமிய இசைக் கருவிகளையே ராஜா சார் பயன்படுத்தி இருக்கார். முதல் பாடலைக் கேட்ட எல்லாரும் அப்படியே அசந்து போய் நின்னுட்டாங்க. ராஜான்னா சும்மாவா… திரை இசையின் ராஜாவாச்சே அவர்… இந்த ஆண்டோட சூப்பர் ஹிட் பாடல்களா அய்யன் பாடல்கள் அமையப் போகுது. நமது மண்ணின் மணத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிற படமா இது நிச்சயம் அமையும். இளையராஜாவின் இசைக்கு அதில் பெரும் பங்கு வகிக்கப்போகிறது… இந்த மாசம் 15-ம் தேதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துல படப்பு நடத்தப் போகிறோம்…” என்றார்.
மேலும் விவரங்களுக்கு
ஜி.பாலன், பி.ஆர்.ஓ.9383388860

''என் பெயர் குமாரசாமி'' முன்னோட்டம்


திருநல்லான் பிலிம்ஸ் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'என் பெயர் குமாரசாமி'. புதுமுகங்களுடன் முன்னனி நட்சத்திரங்கள் பங்கேற்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரதன்சந்திரசேகர். இவர் சில இயக்குநர்களிடம் துணை, இணை இயக்குநராக பயிற்சி பெற்றவர். இவர் இயக்கும் முதல் படம் இது.
இப்படத்திற்கு வீ.தஷி இசையமைக்க, பாடல்களை கவிஞர் தாமரை, யுகபாரதி, தொல்காப்பியன் ஆகியோர் எழுதுகின்றனர். பிருந்தா, தினேஷ், ரமேஷ் ரெட்டி ஆகியோர் நடனம் அமைக்க, சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு வி,டி.விஜயன்.
இப்படத்திற்கு ஏவி.எம்.'ஆர். ஆர்' ஒலிப்பதிவு கூடத்தில் வீ.தஷி இசையமைப்பில், இயக்குநர் ரதன் சந்திரசேகர் எழுதிய ''ஆரிரரோ ஆரிரரோ... அன்னை மடியில் நானுறங்க.. என்னை மறந்து கண் மயங்க..'' என்ற பாடலை, பின்னனி பாடகர் பி.சி. சுபீஷ் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மற்ற பாடல்களும் தொடர்ந்து பதிவாகிறது.
தாயின் அதீத அன்பாலும், தந்தையின் அளவுக்கு மிஞ்சிய கோபத்தாலும் பாதிக்கப்படும் ஒரு இளைஞனின் கதை இது. 'புறச்சூழல்தான் ஒரு மனிதனின் வாழ்நிலையைத் தீர்மானிக்கிறது' என்ற வரிகளுக்கு உயிரூட்டுகிறது 'என் பெயர் குமாரசாமி'. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி ஒரே கட்டப் படப்பிடிப்பாக நடந்து முடிவடைய உள்ளது.

"மாணவன் நினைத்தால்" - விமர்சனம்
மாணவன் என்பவன் நன்றாக படித்து மார்க் வாங்குகிறவனாக மட்டும் இருந்தால் போதாது, நல்ல குணங்கள் உடையவனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம் தான் ''மாணவன் நினைத்தால்...''.
புதுமுக நாயகன் ரித்திக், லேசாக அருண் விஜய்யை நினைவூட்டுகிறார். அப்பாவியாகவும், காதலில் விழுந்தவராகவும் வரும் இடங்களில் சரியாக பொருந்துகிறார். ஆட்டம், பாட்டத்திலும் சளைக்காமல் செய்திருக்கிறார். ஆனாலும் சுறுசுறுப்பு கொஞ்சம் குறைவாகத் தெரிவதால் அவரது சோகமான முகமே மனதில் பதிகிறது.
நாயகி ஆதிரா படு ஆக்டிவ்வாக சிரித்த முகத்துடன் வளைய வருகிறார். ராகிங்கில் இருந்து ரித்திக்கை தப்பிக்க வைக்க முத்தம் கொடுத்துவிட்டு, பின் என்னோட ஸ்டேட்டசுக்கும் உன்னோட ஸ்டேட்டசுக்கும் காதல் சரிப்பட்டு வராது என்று அதிர்ச்சி தருகிறார்.
சிங்கிள் பிரேமில் கூட மாற்றம் இல்லாத வழக்கமான கல்லூரி, ஆட்டம், பாட்டம், ரகளை எல்லாம் உண்டு. பேராசிரியராக வரும் மனோபாலா, ''பாஸ்மார்க், டாஸ்மார்க்'', அர்னால்டு மாதிரி இருந்த நான் ரெனால்ட்ஸ்பென் மாதிரி ஆயிட்டேன் என்று பஞ்ச் டயலாக்குகளால் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
ரித்திக் நண்பனாக வரும் கொட்டாச்சி, கொஞ்சம் ஒவராகப் பேசினாலும் நட்புக்காக, நண்பனிடம் அடிவாங்கும் இடத்தில் மனதில் நின்று விடுகிறார். சொற்ப நேரமே வந்தாலும் ''நச்'' என்று முத்திரை பதிக்கிறார் அனுமோகன்.
பஸ் கண்டக்டராக வரும் சிங்கமுத்து பண்ணுவது செம காமெடி அலப்பறை. நெல்லை சிவா சொல்லும் ஜோசிய லாஜிக் சரியான வார்த்தை விளையாட்டு. தஷி இசையில் பாடல்களில் பழைய வாசம் கொஞ்சம் தூக்கல் என்றாலும் ஒ.கே. மணிவண்ணன் பாடும் ''காதல் கொள்ளாதே பூமணமே''. தேவா ஸ்டைல் என்றாலும் பரவாயில்லை, ''ஷேக்ஸ்பியர், செக்ஸ்பியர்'', ''பாஸ்மார்க், டாஸ்மார்க்'', ''உன் மனசு எனக்கு புரியுது, ஆனா உன் வயசு உனக்கு புரியல'' என அங்கங்கே இயக்குனர் ஞானமொழியின் பேனா சிலேடை பேசுகிறது.
''புகை பிடிக்காதீர்'' என்பதை, ''கை பிடிக்காதீர்'', ''கை பிடி'' என்று காட்டும் போது இயக்குரின் திறமை நச். இருப்பினும் ஆபாச வாடை வருகிறது. எல்லா மாணவர்களும் நல்லொழுக்கத்துடன் இருந்தால் இந்தியா வல்லரசாகும் என்று சொல்ல வரும் இயக்குனர் ஞானமொழி, காமெடி, குத்துப்பாட்டு, காலேஜ், லூட்டியோடு.. கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பாக்யராஜ் வந்தவுடன் சற்றே விர்ரென்று செல்கிறது கதை. பாக்யராஜ் தனது பாணியில் 'எண்ட்ரி' ஆகும் போது கொஞ்சம் விறுவிறுப்பு கூடுகிறது. சென்னை போலீசை திருவண்ணாமலை வரை கூட்டிச்சென்று மறுபடி சென்னைக்கு கூட்டி வரும்.. பாக்யராஜின் சலம்பல்.. ரொம்ப நாளைக்கப்புறம் பாக்யராஜ் படம் பார்த்த நினைப்பைத் தருகிறது.
தற்கொலை செய்யப்போன ரித்திக்கை காப்பாற்றி, அம்மாவையும் காப்பாற்றி கடைசி நிமிடத்தில் பரிட்சை எழுத முடியாமல் தவிக்கும் ரித்திக், வில்லன் கோஷ்டியையும் காப்பாற்றி, பாக்யராஜ் சுபமாய் முடிக்க.. காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் ஆதிரா - ரித்திக் காதலிலும் ஒன்று சேர.. நலம் & சுபம்.

ஆனந்தம் ஆயிரம்.


ரங்கீலா எண்டர்பிரைசஸ் சார்பில் சித்திரைச் செல்வன் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் காதல் படம் ஆனந்தம் ஆயிரம்.
இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் திரைப்படக் கல்லூரி மாணவர் நானு ஹரி. தமிழில் இவருக்கு முதல் படம் இதுதான்.
புதுமுகம் சிவா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூமிகா நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீஹரி இப்படிக் கூறுகிறார்:
“சந்தோஷத்தைச் சந்தோஷமா சொல்லணும். ஆனா கஷ்டத்தை சந்தோஷமா சொல்வது கயிறு மேல் நடப்பது மாதிரி சாகஸமான வேலை. கொஞ்சம் தவறினாலும் கவுந்திடும். அந்த மாதிரி ஒரு ஸ்கிரிப்ட்தான் இந்தப் படம்.
இந்த ஸ்கிரிப்டை உருவாக்கும்போது எனக்கு என்ன உணர்வு இருந்ததோ அதே உணர்வு படம் பார்ப்பவர்களுக்கும் வரும். காதலுக்கு அந்த வலிமை உண்டு. காதலின் வலியையும் சுகத்தையும் அனுபவிக்கிற மாதிரியான காட்சிகள் இந்தப் படத்தில் நிறையவே இருக்கு.
இந்தக் கதையை நான் முதலில் தெலுங்கில்தான் பண்ணினேன். சத்யபாமா எனும் பெயரில் வெளியான இப்படத்துக்கு நல்ல வரவேற்பு. இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் என பேதமின்றி எல்லோரும் நூறு சதவிகிதம் ரசித்துப் பார்த்த படம் இது. வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு.
பூமிகாவோட கேரியர்ல பெருமையா சொல்லிக்கிற படமா இது இருக்கும்னு எல்லாரும் சொன்னாங்க. அந்த அளவு கேரக்டராவே ஒன்றிப்போய் வாழ்ந்திருப்பாங்க பூமிகா.
இந்தக் கதையை எடுக்கும்போது என்ன நம்பிக்கை இருந்த்தோ அதே மாதிரி படத்தின் வெற்றியும் இருந்தது. அந்தப் படம்தான் இப்போது ஆனந்தம் ஆயிரமாக தமிழுக்கும் வருகிறது. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்…”
நம்பிக்கைக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் பலன் இருக்கத்தானே செய்கிறது!

கலைஞர் கவசம்!


கின்னஸ் உலக சாதனைக்காக, தஷியின் இசையில் 108 இசை வடிவங்களில் 108 பாடகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கணியத் தமிழ் நிறுவனத்தின் கலைஞர் கவசம் ஆடியோ சிடியை தமிழக முதல்வர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
முதல்வர் கலைஞரின் 85வது பிறந்தா நாளையொட்டி அவரது பெருமைகளை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இசைத் தொகுப்பை 108 பாடகர்கள் பாடியுள்ளனர். இந்துஸ்தானி, கஸல், கர்நாடக சங்கீதம், மேலை நாட்டு இசை என பல வடிவங்களில் இந்தப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெயகாந்தனின் உதவியாளர் திப்பு என்கிற சை.சா உசைன் எழுதியுள்ள இந்தப் பாடல் தொகுப்பு, உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
முதல்வர் கலைஞர் பிறந்தா நாள் கொண்டாடிய செவ்வாய்க்கிழமை அதிகாலை, அவரது சிஐடி நகர் இல்லத்தில் முதல் சிடி வெளியிடப்பட்டது. முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள் சிடியை வெளியிட்டார். இசையமைப்பாளர் தஷி, பாலம் கல்யாணசுந்தரம், இயக்குநர் ஜெயபாரதி, மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன், கணியத் தமிழ் சாஃப்ட்வேர் அ.திவாகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
படங்கள்: சித்ரா சுவாமிநாதன்.